திருவிவிலியம் தரும் அமைதிவாழ்வு
முனைவர் ஆ. பாப்பிகமலாபாய்,
இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
தமிழ் உயராய்வு மையம்,
பாத்திமா கல்லூரி, மதுரை - 18.
இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
தமிழ் உயராய்வு மையம்,
பாத்திமா கல்லூரி, மதுரை - 18.
அமைதி என்னும் சொல் உலகில் வாழும் மனிதர்களுக்கு எல்லா நிலைகளிலும் தேவைப்படுகின்ற ஒன்றாகும், இன்றைய உலகின் போர்களும். பூசல்களும் மனித வாழ்வில் தீமையின் ஆற்றல் வேரூன்றிவிட்டது என்பதைக் காட்டுகிறது. உலகத் தோற்றமுதலே மனித இனம் மோதல்களுக்கிடையே வாழ்ந்து வந்துள்ளது, இந்நிலையில் உலகில் பல சமயங்களும் அமைதியாக்கக் கருத்துகளை எடுத்துரைத்து மக்களை நல்வழியில் செயல்படத் தூண்டுகின்றன, கிறித்தவ சமய புனித நூலான திருவிவிலியம் அமைதி என்பதை அடிப்படை மதிப்பீடுகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளது.
கிறித்தவம் குறிப்பிடும் அமைதி அல்லது சமாதானம் என்னும் சொல் திருவிவிலியம் முழுமையும் இடம்பெறும் சொல்லாகும், கிறித்தவத்தின் மையக் கருத்தே சமாதானத்தை உருவாக்குவதாகும், இச்சொல் பழைய ஏற்பாட்டில் ஷாலோம் (ளூயடழஅ) என்ற எபிரேயச் சொல்லாலும், புதிய ஏற்பாட்டில் ஐரேனே (நுசைநநெ) எ;னும் கிரேக்ககச் சொல்லாலும் குறிக்கப்படுகிறது. எபிரேய மொழி யூத இனத்தவரின் தாய்மொழியாக அமைந்து அம்மக்களின் பற்றுறுதி, சமயநம்பிக்கை, கலாச்சாரம் முதலியவற்றை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ~~ஷாலோம் (ளூயடழஅ) என்பதற்கு வளமான நிறைவான ஆசீர்வாதங்கள் நிறைந்த வாழ்வு இறைவனால் மனிதருக்கு அருளப்படும் வளமான வாழ்வு|| (டாக். பாண்டியன், டாக். வீரா அழகிரிசாமி, சமயங்களும் அமைதி அகிம்சைப் பண்பாடும், ப. 26) எனப் பொருளுண்டு, இக்கருத்தின் அடிப்படையில் நோக்கினால் அமைதி என்பது மனித வேட்கையாகவும், செயற்பாடாகவும் நின்றுவிடாமல் இறைவனின் திருக்கொடை எனும் கருத்தைப் புலப்படுத்துகிறது.
அமைதியைக் குறிக்கும் ஐரேனே எனும் சொல்லாட்சி கிரேக்க மொழியைச் சார்ந்தது. இது யுத்தமற்ற நிலை என்னும் பொருளைத் தருகிறது. புதிய ஏற்பாட்டில் ஷாலோம் எனும் சொல் யூத மத நம்பிக்கையையும். இயேசுக்கிறித்துவைக் குறித்த நம்பிக்கையையும் எதிர்காலத்தில் தோன்றக்கூடிய இறையரசு மற்றும் இறையரசின் அமைதியையும் குறிப்பதாக அமைந்துள்ளது. இயேசு கிறித்துவின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது மனுக்குலத்துக்கும் இயற்கைக்கும் அருளப்படும் அமைதி நிறைந்த புது வாழ்வைச் சுட்டுகிறது. சிலுவையில் அறையுண்டு இறந்து உயிர்த்தெழுந்த இயேசு மனுக்குலத்திற்கு அமைதி உண்டாகட்டும் என்று வாழ்த்துகிறார். இது வெறும் வாழ்த்துரையாக அமையாமல் மெய் வாழ்வு தரும் வாழ்த்தாக அமைந்துள்ளது.
எபிரேய மொழியில் இடம்பெறும் ஷாலோம் என்னும் சொல் நிறைவு, வளமை, புதுப்பித்தல், உண்மை போன்றவற்றைக் குறித்து நிற்கிறது. ~~ஷாலோம் என்ற வார்த்தையின் அடிப்படையான பொருள் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் இசைவு, முழுமை, ஆரோக்கியம், நன்மை, வெற்றி ஆகியவைகள் நிறைந்திருக்கும் தன்மையாகும்|| (டேவிட் ஈ. ஸ்டூவர்ட், நிறைவாழ்வு ஆய்வு வேதாகமம்,
ப. 1035) என நிறைவாழ்வு ஆய்வு வேதாகமம் குறிப்பிடுகிறது, மேலும் நாள்தோறும் வாழ்வில் ஏற்படும் வளம், நன்மை போன்றவற்றை இயற்கையோடும், மனிதர்களோடும், சமூகத்தோடும் இணைந்து வாழும் நிலையையும் இச்சொல் குறிக்கின்றது, எனவே இச்சொல் வளம், நட்பு, சுகவாழ்வு, ஓய்வு, மீட்பு என்பவற்றை உள்ளடக்கியதாக உள்ளது. அமைதியும் மகிழ்ச்சியும், அமைதியும் மீட்பும், அமைதியும் நீதியும் என்னும் சொற்றொடர்கள் திருவிவிலியத்தில் இணைந்துவருகின்றன.
பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள ஷாலோம் என்னும் சொல் சமாதானம் எனும் பொருளைத் தன்னுள் அடக்கியுள்ளது, தாவீது அப்சலோமின் சுகத்தைப் பற்றி விசாரிக்கும்போது ~~இளைஞன் அப்சலோம் நலமா?|| (2சாமு 18 : 29) என்று கேட்கிறான், சங்கீதக்காரன் உடல் நலமில்லாத நிலையில் ~~நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை|| (தி.பா. 38:3) என்கிறார். கடவுள் மனிதனைக் குணப்படுத்தி அவனுக்கு ஆறுதல் அளிப்பவராகச் செயல்படுகிறார். ~~தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி என்கிறார் ஆண்டவர், அவர்களை நான் நலமடையச் செய்வேன்|| (எசா 57:19) என எசாயா தெரிவிக்கிறார். இவ்வாறு அமைதி என்னும் இச்சொல் உடல் நலத்தைக் குறிப்பதாக விவிலியத்தில் கையாளப்பட்டுள்ளது.
"உங்களுக்கு அமைதி உண்டாகுக. அஞ்சவேண்டாம்" (தொ.நூ. 43:23) என அச்சத்தைப் போக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்து பின்னர் இறந்து போனால் அவன் அமைதியாகத் தன் மூதாதையருடன் சேர்வதாக நம்பப்பட்டது. (தொ.நூ. 15 : 15) "நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்" (2அர. 22:20) எனக் குறிப்பிடும்போது மரணம் ஒரு மனிதனுக்கு மன அமைதியைத் தருவதாக திருவிவிலியம் சுட்டுகிறது. ஒரு நாடு அமைதியாக இருந்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும். எனவே நாட்டின் அமைதிக்காக வேண்டுதல் செய்தல் அவசியம், "எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்" (தி.பா. 122:6) என அந்நகரின் அமைதி வாழ்விற்காக இறை வேண்டுதல் செய்யும்படி திருவசனம் கூறுகிறது.
இரு கூட்டம் சார்ந்த மக்களிடையே நட்பு, ஒற்றுமை, ஒத்துழைப்பு இருக்குமானால் அந்நிலை அமைதிநிலை எனப்படுகிறது (1அர 5:12), இப்படிப்பட்ட ஒருமைப்பாடு ஒரு உடன்படிக்கையின் காரணமாகத் தோன்றினால் அது சமாதானத்தின் உடன்படிக்கை என்று குறிப்பிடப்படுகிறது (எண் 35:12, யோசு 9:15).
கடவுள் அமைதியின் உடன்படிக்கையை மனிதனோடு செய்ய விரும்புகிறார், மனிதன் நிறைவாக வாழவேண்டுமானால் மனிதனுக்கும் கடவுளுக்குமிடையே சமாதானம் நிலைத்திருக்க வேண்டும். இதனையே "மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது, என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது" (எ.சா. 54:10) என்று திருவிவிலியம் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட அமைதிக்கும் இறைவனிடமிருந்து வரும் மீட்பிற்கும் தொடர்பு உண்டு. இறைவனே இவ்வமைதியை நிலைக்கச் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பதால் கிதியோன் தான் கட்டின பலிபீடத்திற்கு யேகோவா ஷாலோம் எனப் பெயரிட்டான் (நீத 6:24), இறைவனே சமாதானத்தைத் தருபவர், ஏனெனில் "அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதியை நிலவச் செய்கிறார்" (திபா 147:14) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் நல்வாழ்வு தருவதோடு சமாதானத்தை நதியைப் போலவும். நியாயத்தைச் சமுத்திரத்தின் அலையைப் போலவும் அனுப்புகிறவராகச் செயல்படுகிறார். (எசா48:18). இந்த அமைதியை மனிதன் பெற்றக்கொள்ள வேண்டுமாயின் இறைவனோடு மனிதன் இணைந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் வேண்டும் (திபா 29:11, எசா 26:8.12), அமைதி நீதியோடும், இறைக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலோடும் தொடர்புடையது. எனவே "அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக, நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக" (திபா 72:7) எனத் திருவசனம் குறிப்பிடுகிறது.
அமைதி என்பது இறைவனின் ஆட்சியைக் குறிக்கின்ற சொல்லாகும். இவ்வாட்சி மேசியாசின் வருகையினால் கிடைப்பதாகும். மேசியாவாகிய இயேசு ~~வேற்றினத்தாருக்கு அமைதியை அறிவிப்பார்|| (செக். 9:9.10) இதனால் மேசியா அமைதியின் அரசர் (எசா 9:6) என அழைக்கப்படுகிறார். இவ்வமைதி நிலைத்திருக்க விரும்பினால் இறைவனின் மனவிருப்பத்தை நிறைவேற்றும் வாழ்வு வாழ வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் அமைதி
புதிய ஏற்பாட்டில் அமைதியைக் குறிக்க ஐரேனே என்னும் கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. போரில்லாத அமைதி நிலையைக் குறிப்பதே இச்சொல்லின் அடிப்படையான பொருளாகும். முற்காலத்தில் பழைய ஏற்பாடு திருமறையாக இருந்ததால் கிறித்தவ நூலாசிரியர்கள் இந்த கிரேக்கச் சொல்லுக்கு ஷாலோம் எனும் சொற்பொருளினைச் சேர்த்துக் கொண்டனர்.
சமாதானம் என்னும் சொல் யூதர்களுடைய பழக்கத்தின்படி ஒரு வாழ்த்தாகவே புதிய ஏற்பாட்டில் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால் நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்" (லூக். 10:6) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதங்களில் இது பழக்கமான வாழ்த்துதலாக இடம்பெற்றுள்ளது. (உரோ 1:7) இயேசு தன்னுடைய வெற்றியை முடித்துச் சீடர்களைச் சந்தித்தபோது "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" எனக் கூறுகிறார் (யோவா 20:19) இறைவன் அருளும் அமைதி, நீதி, மகிழ்ச்சி இவற்றோடு தொடர்புடையது.
"இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிவற்றையே அடிப்படையாகக் கொண்டது" (உரோ 14:17) என்று திருவசனம் குறிப்பிடுகிறது. இத்தகைய வாழ்வுதான் ஷாலோம் என்னும் சொல் குறிக்கும் நிறைவாழ்வாகும்.
புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் அமைதி என்னும் சொல்லில் மீட்பு என்னும் பொருளும் அடங்கியிருக்கிறது. எனவேதான் வானதூதர்கள் "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" (லூக் 2:13.14) என வாழ்த்துவதாக வசனம் உணர்த்துகிறது. செக்கரியாவின் பாடலும் "இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போருக்கு ஒளி தரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது."| (லூக் 1:79) எனக் கூறுகிறது. இவ்வாறு இயேசு கிறித்துவின் மூலமாக வந்த அமைதியே நற்செய்தியாகும் (திப 10:36) இவ்விதமான சமாதானத்தைத் தரவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் (யோவா 14:27) எனவும் திருவிவிலியம் குறிப்பிடுகிறது.
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன், நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றதல்ல, நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருவ வேண்டாம்" (யோவா 14:27) "என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன்" (யோவா 16:33) எனும் திருவசனங்கள் இறைவன் அருளும் அமைதி மன ஆறுதல் தரும் ஆற்றலுடையதாக விளங்குகிறது.
தனி மனிதனுக்கு அமைதி உண்டாக வேண்டுமாயின் இறைவனை எதிர்த்து நிற்கும் மனிதனுடைய மனநிலை மாறவேண்டும், இதன்வழி கடவுளுக்கும். மனிதனுக்கும் இடையில் ஒற்றுமை. நட்பு போன்றவை உருவாகும், இயேசு உலகில் தோன்றிய நோக்கமும் இதுவேயாகும் (உரோ 5:1) பிரிவினைகள் மறையும்போது அமைதி ஏற்படும், "அவரே நமக்கு அமைதி அருள்பவர், அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் கவரைத் தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்து அவர்களை ஒன்றுபடுத்தினார்" (எபே 2:13-14) என்னும் வசனம் இறைவன் பகைமையைத் தன் மரணத்தினால் மாற்றி அமைதியை உருவாக்கினார் எனக் கூறுகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அமைதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். ஏனெனில் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத். 5:9), எனவே அமைதிப்பணியைச் செய்யும் பொறுப்பை இறைவன் மனிதர்களின் கையிலே கொடுத்திருக்கிறார் என்பது புலனாகிறது.
அமைதியானது இறைவன் மனிதருக்கு நிறை வாழ்வை அருளும் நோக்கத்தில் தன்னையே பலியாகக் கொடுத்ததால் கிடைத்த ஒன்றாகும். மனிதர் இந்த அமைதி வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும். "அமைதியுடன் இயைந்து வாழ்ந்து தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்" (எபே 4:3) என வலியுறுத்தப்படுகிறது.
கடவுள் விரும்பும் ஒழுங்குள்ள தன்மை அமைதியாகும். அதை நிலைநாட்டும் ஆற்றல் அவரிடம் மட்டுமே உண்டு, "கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல, அமைதியை ஏற்படுத்துபவர்," (1கொரி 14:33) அமைதிதரும் கடவுள் (1தெச 5:23) என்பது அவர் பெயராகும். மேலும் இவ்வமைதி ஒரு உள்ளத்தில் தோன்றும் அமைதியல்ல, பாவமன்னிப்பின் மூலமாகவும், கடவுளோடு ஒப்புரவாகுதல் மூலமாகவும் ஏற்பட்ட நிறைவான வாழ்வாகும். இயேசுவின் சிந்தனை உள்ளத்தில் இருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் (உரோ 15:13) என விவிலியம் குறிப்பிடுகிறது. இவ்வமைதி வாழ்வு வாழ அன்பும் ஒற்றுமையும் மனிதர்களுக்கும் தேவை (2கொரி 13:11) எனவே இதனை நாடுதல் வேண்டும். கிறித்து அருளும் அமைதி உள்ளங்களை நெறிப்படுத்துவதோடு ஒரே உடலின் உறுப்புக்கள் போல் செயல்படவும் தூண்டுகிறது. (கொலோ 3 :15) கிறித்தவ சபைக்கு இப்பண்புகள் மிக முக்கியமானதாக அமைகிறது.
கிறித்தவம் உணர்த்தும் அமைதி என்னும் சொல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைவு, முழுமை, ஆரோக்கியம், நன்மை, வெற்றி, வளம் என்னும் பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் யூத மத நம்பிக்கையையும், மேசியாவைக் குறித்த நம்பிக்கையையும், எதிர்கால இறையரசின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. மனிதன் தனி வாழ்வு, குடும்பம், சமுதாயம் எனும் எல்லா வாழிடங்களிலும் அமைதியைப் பெறவேண்டும் என்பதற்காகவே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் மனிதர் நிறைவாழ்வு வாழ்வதோடு சமுதாயத்திலும் அமைதியை உருவாக்க முடியும் என திருவிவிலியம் வலியுறுத்துகிறது. கடவுள் விரும்பும் ஒன்றாக இவ்வமைதி காணப்படுகிறது. பாவமன்னிப்பின் வழியாகவும், இறைவனோடு ஒப்புரவாகுதலின் மூலமாகவும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். உலகில் அமைதியை நிலைநாட்டவே இயேசு இவ்வலகிற்கு வந்தார், அவர் அருளிய அமைதியை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதே சீடரின் பணி என்பதையும் திருவிவிலியம் உணர்த்துகிறது. இதன்வழி ஒவ்வொரு கிறித்தவரும் அமைதி நெறியைப் பின்பற்றி வாழ்வது முக்கியம் என்னும் கருத்து வெளிப்படுகிறது.